LATEST NEWS
“ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்..” தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டோம்.. தவெக எம்எல்ஏ கைது குறித்து ஸ்டாலின் ஆவேசம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய புகாரில் தொடர்புடைய தவெக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் பணியிடத்தில் தொந்தரவு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும், ஐஜி என். காமினி விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு, போஷ் சட்டத்தின் கீழ் நான்கு உறுப்பினர்கள் கொண்ட உள் புகார் குழுவையும் தமிழக அரசு அமைத்திருந்தது.
இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து அவரைப் பாதுகாக்கப் பொய் மேல் பொய்களைக் கூறியதாகவும், அமைச்சர்கள் முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரை புகாரை மறுத்து நன்னடத்தைச் சான்றிதழ் வழங்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு அந்தப் பெண் அதிகாரி தைரியமாகப் புகார் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றம் மற்றும் மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது தவெக எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும் என்றும், சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
