LATEST NEWS
“உச்சநீதிமன்றம் இதைத் தனது ‘ஈகோ’ பிரச்சினையாகப் பார்க்கிறதா..?” திருப்பரங்குன்றம்தீர்ப்பு குறித்து திருமாவளவன் வெளியிட்ட பரபரப்புக் கருத்து.. தமிழக அரசியலில் அனல்..!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள் குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டும் வேகத்தையும் அணுகுமுறையையும் விமர்சித்துள்ள அவர், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக அமைதியான முறையில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை மாற்றி, உடனடியாகத் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருமாவளவனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தனது கௌரவப் பிரச்னையாகப் பார்க்கிறதா என்ற சந்தேகத்தையும் திருமாவளவன் வெளிப்படுத்தியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தது, கோயில் மற்றும் மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைத்தது போன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி, “உச்சநீதிமன்றம் இதை தனது ‘ஈகோ’ பிரச்னையாகக் கருதுகிறதா?” என அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு நிர்வாக ரீதியான மற்றும் வழிபாட்டு ரீதியான விவகாரத்தில் இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது குறித்து அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதே அனைவரது தலையாய கடமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள திருமாவளவன், “சமூக நல்லிணக்கத்தை விடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோதான் முதன்மையானதா?” எனக் காட்டமாக வினவியுள்ளார். இரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றம் பகுதியில், பதற்றத்தை உருவாக்கும் வகையிலான சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ள நிலையில், திருமாவளவனின் இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
