CRIME
“படித்தது 11ஆம் வகுப்பு.. ஆனால் கையில் MBBS, MD, DMRD சான்றிதழ்கள்..” மருத்துவமனைகளில் சோனோகிராஃபி வரை பார்த்த போலி மருத்துவர் சிக்கியது எப்படி..? பகீர் பின்னணி..!!
11ஆம் வகுப்பு மட்டுமே படித்த ராம்கிஷோர் மஹாவர் என்ற நபர், பல்வேறு மருத்துவமனைகளில் வார்டு பாய் மற்றும் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு போலியான மருத்துவப் பட்டங்களைப் பெற்று மருத்துவராக வலம் வந்தார். முதலில் மொபைலில் இருந்த மருத்துவப் பட்டத்தின் PDF-இல் பெயரை மாற்றி போலியான MBBS சான்றிதழ் தயாரித்து ராஜஸ்தான் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த அவர், பின்னர் ஆகஸ்ட் 2024 முதல் ஏப்ரல் 2025 வரை டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் பணியாற்றியபோது ஃபேஸ்புக்கில் கண்ட விளம்பரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைத் தொடர்பு கொண்டுள்ளார். சுமார் 5.5 லட்சம் ரூபாய் செலுத்தியதன் பேரில், தமிழ்நாடு வாரியம் மற்றும் சிக்கிம் மணிப்பால் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெயரில் 12ஆம் வகுப்பு, MBBS மற்றும் MD (காயனகாலஜி) சான்றிதழ்களை கூரியர் மூலம் பெற்று, டெல்லி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து ஜூன் 2025-இல் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் ரெசிடென்ட்டாகச் சேர்ந்துள்ளார்.
தொடர்ந்து DMRD எனப்படும் மருத்துவ ரேடியோ டயக்னோசிஸ் பட்டத்தையும் சுமார் 5.5 லட்சம் ரூபாய்க்குப் பெற்று டெல்லி மருத்துவ கவுன்சில் பதிவில் சேர்த்ததோடு, மிராஜ் அரசு மருத்துவக் கல்லூரி பெயரில் போலி DMRD ஆவணங்கள் மற்றும் மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் பதிவுக்கு சுமார் 8.50 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆன்-கால் சோனோகிராஃபியும் செய்து வந்துள்ளார்.
சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் வாடிக்கையாளர்களைத் தேடி, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இளங்கலைப் பட்டங்கள் முதல் MBBS, MD, MS, BAMS மற்றும் பொறியியல் வரை பல்வேறு போலி சான்றிதழ்களை வழங்கும் கும்பல் பல மாநிலங்களில் செயல்பட்டு வருவதை SOG கண்டறிந்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசும் சத்யஜித் பாணிக்ரஹி, போலி மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டங்களைத் தயாரிக்கும் மனீஷ் மாஞ்சி, பல்கலைக்கழக இணையதளங்களில் அவற்றை பதிவேற்றம் செய்யும் குர்ரம் தௌஃபிக் மற்றும் ராம்கிஷோர் மஹாவர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்; மேலும் மைசூர், ஆந்திரா, அண்ணா, காக்கத்தியா, சௌராஷ்டிரா மற்றும் மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் உள்பட சுமார் 30 முதல் 40 கல்வி நிறுவனங்களின் பெயர்களில் போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டதா என்பது குறித்தும், பல்கலைக்கழக இணையதளங்களில் போலி பட்டங்கள் எவ்வாறு பதிவேற்றப்பட்டன என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
