“பணம் கொடுத்தா மட்டும் போதாது..” சொத்தை எழுதி வாங்கிட்டு 86 வயது தந்தையை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிய மகன்.. நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பணம் கொடுத்தா மட்டும் போதாது..” சொத்தை எழுதி வாங்கிட்டு 86 வயது தந்தையை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிய மகன்.. நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி..!!

Published

on

மும்பையின் மலாடு பகுதியைச் சேர்ந்த 86 வயதான தேவ்சந்த் கோர்ஷி தேதியா என்பவர், 2015ஆம் ஆண்டு மனைவி மறைவுக்குப் பிறகு தன்னைப் பராமரிப்பதாகக் கூறிய மூத்த மகன் ஷிபன் தேதியாவுக்கு, 2018ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி தமது குடியிருப்பு வீட்டைப் பரிசுப் பத்திரம் மூலம் மாற்றிக் கொடுத்துள்ளார். அந்தப் பத்திரத்தில் தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் அந்த வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு என்ற நிபந்தனையும் இடம்பெற்றிருந்தது. ஆனால், சொத்து மாற்றப்பட்ட பிறகு கொரோனா காலத்தில் வீட்டிற்குள் நுழையவும், தனது உடைமைகள் மற்றும் ஆவணங்களை எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், முறையான பராமரிப்பு இன்றி வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு இறுதியில் கோரே பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் முறையிட்டார். இதையடுத்து அவர் அனுப்பிய சட்ட நோட்டீஸ் மற்றும் 2023ஆம் ஆண்டு மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் மாதம் ரூ.10,000 பராமரிப்புத் தொகை மற்றும் கிடங்கு உரிமை வழங்கப்பட்ட போதிலும், வீட்டுக்கான பரிசுப் பத்திரத்தை ரத்து செய்ய மறுக்கப்பட்டதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

வழக்கு விசாரணையின் போது, வீட்டை வாங்க மகன் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.13.50 லட்சம் செலவிட்டதாகவும், தந்தையை மீண்டும் வீட்டில் தங்க அனுமதிக்கத் தயாராக இருப்பதாகவும் மகனும் மருமகளும் வாதிட்டனர். எனினும், பரிசுப் பத்திரத்தில் உள்ள வாழ்நாள் வசிப்புரிமை நிபந்தனையே முக்கியம் எனக் கருதிய நீதிபதி ஆர்த்தி சாத்தே தலைமையிலான மும்பை உயர்நீதிமன்ற அமர்வு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007-ன் 23வது பிரிவின்படி, பராமரிப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட சொத்து மாற்றத்தை, அந்த நிபந்தனை மீறப்படும்போது ரத்து செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டியது. மேலும், பராமரிப்பு என்பது பணம் வழங்குவதோடு நின்றுவிடாமல் ஒருவர் அமைதியாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமையையும் உள்ளடக்கியது என்று நீதிமன்றம் விளக்கியது.

Advertisement

இதன் அடிப்படையில், 2018ஆம் ஆண்டு எழுதப்பட்ட பரிசுப் பத்திரத்தை ரத்து செய்த நீதிமன்றம், மகனும் மருமகளும் 15 நாட்களுக்குள் வீட்டைத் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறினால் காவல்துறை உதவியுடன் வெளியேற்றப்படலாம் என்றும் உத்தரவிட்டதோடு, தீர்ப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரிய கோரிக்கையையும் நிராகரித்தது. வயதான பெற்றோர்கள் சொத்துகளை மாற்றும்போது வாழ்நாள் வசிப்புரிமை மற்றும் பராமரிப்பு நிபந்தனைகளைப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடுவது அவசியம் என்றும், வழங்கப்பட்ட அன்பைப் பயன்படுத்தி பெற்றோரின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது என்பதையும் இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in