CRIME
“சினிமாவை மிஞ்சிய கேங் வார்”… நம்ப வைத்து கழுத்தறுத்த காதலி.. நூலிழையில் தப்பிய தாதா… 4 பேர் சுட்டுக்கொலை…!!
அரியானாவின் ரோஹ்தக் பகுதியில் உள்ள மிலன் தாபாவில் கடந்த 27ஆம் தேதி அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், பிரபல தாதா சன்னி ரிட்டோலியாவை குறிவைத்து எதிரி கும்பலால் அமைக்கப்பட்ட சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு சன்னியின் கும்பலில் சேர்ந்து, அவருடன் நெருக்கமாகி நம்பிக்கையைப் பெற்ற ஜாஹ்னவி என்ற பெண், காதலியாக நடித்து உளவாளியாகச் செயல்பட்டதாகக் காவல்துறை முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடந்த நாளன்று சன்னி ரிட்டோலியா தாபாவில் இருப்பதை எதிரியான ஹிமான்ஷு பாவ் கும்பலுக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து தாபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சன்னி ரிட்டோலியா பின்வழியாகத் தப்பிச் சென்றாலும், ரிங்கு, வினீத், யாஷ் மற்றும் ஹிமான்ஷு ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலை நடந்த மறுநாளே ஜாஹ்னவி ஹிமான்ஷு பாவ் கும்பலின் உதவியுடன் விமானம் மூலம் பாங்காக்கிற்குத் தப்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையில் ஜாஹ்னவியின் குடும்பத்தினருக்கும் குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது; அவரது தாயார் பாப்லி தேவி மீது பல கடுமையான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது தந்தை பாக்பத்தில் கொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறை கண்டறிந்துள்ளது. பழைய முன்விரோதம் மற்றும் குடும்பப் பின்னணி தொடர்பான கோணங்களிலும் விசாரணை நடைபெறும் நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் ஐந்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
