LATEST NEWS
“இந்திய மருத்துவ உலகில் மாபெரும் சாதனை..” நாட்டிலேயே முதன்முறையாக ரோபோ உதவியுடன் மூளை அறுவை சிகிச்சை செய்து அசத்திய டெல்லி எய்ம்ஸ்.. வியப்பூட்டும் பின்னணி..!!
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் – இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லைப் படைத்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு ரோபோ உதவியுடன் கூடிய ஆழ் மூளைத் தூண்டல் அறுவை சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். மூளையில் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ‘டோபமைன்’ வேதிப்பொருளை உருவாக்கும் நரம்பு செல்கள் சேதமடைவதால் ஏற்படும் இந்த நரம்பு மண்டலக் கோளாறுக்கான மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை, இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் நிகழ்த்தியுள்ளனர்.
இந்த அரிய அறுவை சிகிச்சையில் எய்ம்ஸ் பேராசிரியர்கள் பி. சரத் சந்திரா, மஞ்சுரி திரிபாதி ஆகியோருடன் டெல் அவிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இடோ ஸ்ட்ராஸ், இலா வர்ஷி மற்றும் நரம்பியல் துறை நிபுணர்கள் பங்கேற்றனர். ரோபோ வழிகாட்டுதல் முறையின் மூலம் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் மிகத் துல்லியமாகத் தூண்டல் மின்முனைகள் பொருத்தப்பட்டன. மார்பின் மேற்பகுதியில் தோலுக்கு அடியில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் போன்ற சிறிய கருவியிலிருந்து வயர் மூலம் மூளைக்குச் செல்லும் சிறிய மின் தூண்டல்கள், நரம்பு செல்கள் மற்றும் வேதிப்பொருட்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி நரம்பியல் பிரச்சனைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றன.
இந்த நவீன DBS சிகிச்சையானது பார்க்கின்சன் நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு நரம்பியல் மற்றும் மனநலப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, அத்தியாவசிய நடுக்கம் டிஸ்டோனியா, வலிப்பு நோய், அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர் மற்றும் டூரெட் சிண்ட்ரோம் போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் இந்த ரோபோடிக் மூளைத் தூண்டல் சிகிச்சை மிகுந்த பயனளிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
