LATEST NEWS
“வடைக்குள் இரும்பு போல்ட்”… வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… மன்னிப்பு கேட்ட ஐ.ஆர்.சி.டி.சி…!!
பெங்களூரு – பெலகாவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சமர்த் கோடியால் என்ற பயணிக்கு, காலை உணவாக வழங்கப்பட்ட பருப்பு வடைக்குள் பெரிய உலோக போல்ட் அல்லது இரும்பு நட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடையை இரண்டாகப் பிளந்து உள்ளே இருந்த உலோகப் பொருளை அவர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு, உணவின் தரத்தில் ஏற்பட்ட இத்தகைய பெரிய குறைபாடு குறித்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ரயில்வே உணவின் தரம் குறித்துப் பலரும் அதிருப்தியும் கோபமும் தெரிவித்தனர். அதிக கட்டணம் செலுத்தியும் தரமான உணவு கிடைப்பதில்லை என்று விமர்சித்த இணையவாசிகள், உணவு தயாரிக்கும் மையங்களில் உலோகம் கண்டறியும் கருவிகளைப் பொருத்த வேண்டும் எனவும் நையாண்டியாகக் கருத்துப் பதிவிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பயணிகளிடம் மன்னிப்புக் கோரிய ஐ.ஆர்.சி.டி.சி, சம்பந்தப்பட்ட உணவு வழங்கும் நிறுவனத்தின் மீது அபராதம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், சமையலறைகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.
