CRIME
“நான் யாரையும் அடிக்கவில்லை..!”அலுவலக அறைக்குள் 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. மறுத்த தலைமை ஆசிரியரின் முகத்திரையைக் கிழித்த அந்த ஒரு சிசிடிவி வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள படேரா அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவரைப் பொறுப்புத் தலைமை ஆசிரியர் கமலேஷ் சர்மா அலுவலக அறைக்குள் வைத்துக் கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன. அதுமட்டுமின்றி, வகுப்பறையில் பேசிக்கொண்டிருந்தார்கள் என்ற காரணத்தைக் காட்டி, அதே நாளில் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி என மூன்று பேருக்கு ‘நன்னடத்தை இல்லாதவர்கள்’ எனக் குறிப்பிட்டு மாற்றுச் சான்றிதழையும் அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மாணவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைப் பொறுப்புத் தலைமை ஆசிரியர் கமலேஷ் சர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அந்த மாணவரை அங்கிருந்து வெளியேற்ற மட்டுமே செய்ததாகவும், தான் யாரையும் தாக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், வைரலாகி வரும் சிசிடிவி காட்சிகள் மற்றும் மூன்று மாணவர்களுக்கு ஒரே நாளில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துக் கிடைத்த புகார்கள் மற்றும் வைரல் வீடியோவின் அடிப்படையில், தமோ மாவட்ட ஆட்சியர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கை கல்வி வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
