LATEST NEWS
“பாட்டி சந்தைக்குச் சென்றபோது விபரீதம்”.. 4-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது எப்படி?..
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார்-82 பகுதியில் உள்ள கிரீன் வியூ அடுக்குமாடிக் குடியிருப்பில், நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த ஆறு வயதுச் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேரடியாகத் தரையில் விழாமல் இரண்டாவது மாடியில் இருந்த சிமெண்ட் மேற்கூரையின் மீது விழுந்து கீழே இறங்கியதால், விழுந்த சில நொடிகளிலேயே அச்சிறுவன் தானாக எழுந்து நடக்கத் தொடங்கியுள்ளார்; இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் 40-ஆம் எண் பிளாட்டின் பால்கனியில் இருந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுவனின் தந்தை வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், சிறுவன் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்; விபத்து நடந்த நேரத்தில் பாட்டி ஒரு வேலை காரணமாகச் சந்தைக்குச் சென்றிருந்தபோது, பால்கனிக்குச் சென்ற சிறுவன் நிலைதடுமாறிக் கீழே விழுந்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள் சிறுவனைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்தாலும், அவன் எழுந்து நடக்க முயன்றதைக் கண்டதும் நிம்மதியடைந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் சிறுவனுக்கு எவ்விதக் கடுமையான காயங்களும் ஏற்படவில்லை என்பதும், அவன் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும், உயரமான கட்டிடங்களில் வசிப்போர் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
