CRIME
“வீட்டுல மாவு இல்லை…”சமைக்க மறுத்த மனைவி… ஆத்திரத்தில் கண்ணில் துப்பாக்கியால் சுட்டு தப்பிய கணவன்.. 2 நாள் பூட்டப்பட்ட அறையில் துடித்த கொடூரம்..!!
பீலிபித் மாவட்டத்தின் குங்க்ச்சாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபய்பூர் மாதோபூர் கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நவம்பர் 27 அன்று, அங்கு வசிக்கும் மன்ஜித் சிங் தனது இரண்டாவது மனைவியான 47 வயது சந்தீப் கவுரிடம் உணவு சமைக்குமாறு கூறியுள்ளார். வீட்டில் மாவு இல்லை என்று கூறி சந்தீப் கவுர் சமைக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மன்ஜித், வீட்டிலிருந்த உரிமம் பெற்ற 12-போர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சந்தீப் கவுரின் கண்ணில் குண்டு பாய்ந்து அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
காயமடைந்த மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அவரை வீட்டிற்குள் பூட்டிவிட்டு மன்ஜித் தப்பி ஓடிவிட்டார். இரண்டு நாள்கள் காயங்களுடன் வீட்டிற்குள்ளேயே கிடந்த சந்தீப் கவுருக்கு, அவரது வளர்ப்பு மகன் குர்ஜித் சிங் அண்டை வீட்டாரின் உதவியுடன் உணவு வழங்கியுள்ளார். மேலும், சென்னையில் வசிக்கும் தனது வளர்ப்பு சகோதரர் சர்வஜித்திற்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை கோரக்பூரிலிருந்து சந்தீப் கவுரின் பிறந்த வீட்டார் கிராமத்திற்கு வந்தனர்; அவரது சகோதரி மீனா தேவி அவரைச் சமுதாய சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், நிலைமை மோசமாக இருந்ததால் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மகன் அளித்த புகாரின் பேரில் மன்ஜித் சிங் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், தலைமறைவான குற்றவாளியைத் தேடி கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குங்க்ச்சாய் காவல் நிலைய அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
