LATEST NEWS
“இதைச் சும்மா விடமாட்டோம்..” மசூதி பகுதி இடிப்புக்கு எதிராகத் திரண்ட பெண்கள்… போர்க்களமாக மாறிய தெருக்களால் உச்சக்கட்ட பதற்றம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் சிம்ஹஸ்தா விழாவிற்கான சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்கும் நடவடிக்கையின் போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. மசூதியின் இடிப்பு நடவடிக்கைக்கு பாதுகாப்பிற்காகச் சென்ற காவலர்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதில் 6 காவலர்கள் காயமடைந்தனர். கூட்டத்தைக் கலைக்கவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தடிமதி நடத்தியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கல்வீச்சில் ஈடுபட்டது மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவித்தது தொடர்பாக 10 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் தவறான தகவல்களைப் பரப்பியதாக 5 சமூக வலைதள பிரபலங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெருமளவில் திரண்டு இடிப்பு நடவடிக்கையை நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அண்டை மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட காவலர்கள் உட்பட சுமார் 2,500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சாலை விரிவாக்கத் திட்டத்தின் பாதையில் மசூதியின் 9 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட பகுதி வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்த ஷாஹி மசூதி 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என மசூதி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றி அமைதியை நிலைநாட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
