LATEST NEWS
கன்ட்ரோலை கையில் எடுத்த முதல்வர் விஜய்..! பதிலடி கொடுக்க திமுக கவுன்சிலர்களின் ரகசிய பிளான்.. சென்னையில் சூடுபிடிக்கும் கார்ப்பரேஷன் போர்..!!
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 152-ல் திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளபோதிலும், புதிய அதிகாரிகளின் வரவால் முந்தைய ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 300-க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மாநகராட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 14 தொகுதிகளை தவெக கைப்பற்றியுள்ளது. இதனால் மாநகராட்சிக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைச் செயல்படுத்துவதில் திமுகவுக்குப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது மாநகராட்சியின் வளர்ச்சியைப் பாதிக்கும் என திமுக கொந்தளித்துள்ள நிலையில், முறைகேடுகள் காரணமாகவே அவை ரத்து செய்யப்பட்டதாக புதிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நகராட்சி நிர்வாகத்திற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய்யை மேயரோ அல்லது துணை மேயரோ மரியாதை நிமித்தமாகச் சந்திக்காதது தவெக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் காய்நகர்த்தல்களுக்கு மத்தியில், வரவிருக்கும் ஜூலை 29 மாநகராட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கு மாற்றாகச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தவெக எம்.எல்.ஏ-க்கள், புதிய அதிகாரிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக திமுக கவுன்சிலர்களின் அவசரக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
