LATEST NEWS
“கஞ்சா வாங்கினா போதை மாத்திரை ஃப்ரீ!” இளைஞர்களைச் சீரழிக்க ‘ஆஃபர்’ போட்ட கஞ்சா வியாபாரிகள்.. பொறி வைத்து தூக்கிய போலீசார்.. சென்னையில் அதிர்ச்சி..!!
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே வினோதமான “ஆஃபர்” முறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இரண்டு இளைஞர்களைத் தாம்பரம் மாநகர காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நந்தா (21) மற்றும் கோபி (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் “கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம்” என்ற சிறப்புச் சலுகையை அறிவித்து, இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களின் இந்த வினோத போதைப்பொருள் வியாபாரம் குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், T4 சங்கர் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.1 கிலோ கஞ்சா மற்றும் 50 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
