CRIME
அடப்பாவிங்களா.. நகையை பார்த்ததும் புத்தி மாறிடுச்சே..! 80 வயது மூதாட்டி கொடூரக் கொலை… 5 மாதமாக வேலை செய்த பெண்ணின் பகீர் பிளான்..! தி.நகரில் நடந்த பயங்கரம்..!!
சென்னை தியாகராய நகர், குப்புசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 80 வயதுடைய ராதா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் பெசன்ட் நகரிலும், மகள் டெல்லியிலும் வசித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை, பெசன்ட் நகரில் வசித்து வரும் ராதாவின் மகன் ராம்ஜி யாதவ், தனது தாயை பல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு சிறிது நேரம் தாயுடன் பேசிய பிறகு அவர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை ராதாவின் மேல் வீட்டில் வசித்து வரும் விஜய் ஆதிராஜ் என்பவர் ராம்ஜி யாதவை தொடர்புகொண்டு, ராதாவின் வீடு நீண்ட நேரமாக பூட்டியிருப்பதாகவும், காலிங் பெல் அடித்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராம்ஜி யாதவ் உடனடியாக தாயின் வீட்டிற்கு சென்று மாற்றுச் சாவி மூலம் கதவை திறந்துள்ளார். அப்போது ராதா மூக்கில் ரத்தக் காயத்துடன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அவர் அணிந்திருந்த தங்கச் செயின், வளையல், வைரக் கம்மல், மோதிரம் உள்ளிட்ட நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராதாவின் வீட்டில் கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வந்த மேனகா என்ற பெண், ராதா தனியாக வசிப்பதையும் அவரது நகைகளையும் அறிந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதற்காக தனது நண்பர்களான மௌலி (எ) சந்திரமௌலி மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து, ஆகஸ்ட் 13 மாலை மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகள், வைரக் கம்மல், வெள்ளிப் பொருட்கள், ரூ.2,000 பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
