CRIME
“நமக்கே சரக்கு பத்தாது இவன் வேற” மது குடிக்க தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கொலை.. சென்னையில் பயங்கரம்..!!
சென்னை புழல் ஏரிக்கரையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், முகுந்தன் (21) என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் தொடர்புடைய சஞ்சய் (18) உட்பட மூன்று பேரைத் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணைக்குப் பின் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட முகுந்தனும், சஞ்சய்யும் புழல் ஏரிக்கரைப் பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தத் தொடங்கியுள்ளனர். அப்போது சஞ்சய், முகுந்தனுக்குத் தெரியாமல் தன்னுடைய மேலும் இரண்டு நண்பர்களை அந்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர்கள் அங்கு வந்ததும், “நமக்கே இந்த மதுபானம் பத்தாது, எதற்கு இவர்களை இங்குக் கூட்டிக்கொண்டு வந்தாய்?” என்று முகுந்தன் சஞ்சய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்வி சஞ்சய் மற்றும் அவரது நண்பர்களிடையே கடுமையான வாக்குவாதத்தை ஏற்படுத்திய நிலையில், ஆத்திரமடைந்த சஞ்சய்யின் நண்பர்கள் தங்களது கையில் வைத்திருந்த கத்தியால் முகுந்தனைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைப்பதற்காக முகுந்தனின் உடலைத் தீயிட்டு எரித்து, பயத்தின் காரணமாக மீதி உடலை புழல் ஏரிக்குள் வீசிவிட்டுத் தப்பியோடியது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
