CRIME
“வெளிய சொன்னா வீட்டை விட்டு துரத்திடுவேன்..” 16 வயது மகளை மிரட்டி2 மாதங்களாக சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
சென்னை புழல் பகுதியில், 16 வயதுடைய தனது வளர்ப்பு மகளைக் கடந்த இரண்டு மாதங்களாகப் பயமுறுத்தித் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 39 வயது வளர்ப்பு தந்தை முரளி என்பவரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பின் மகளுடன் புழல் பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது திருவொற்றியூரைச் சேர்ந்த முரளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். நிர்மலா கூலி வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த அரசுப் பள்ளி மாணவியான அச்சிறுமியிடம் முரளி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தை வெளியில் சொன்னால் அடித்து வீட்டை விட்டு விரட்டி விடுவேன் என முரளி மிரட்டியதால், அச்சத்தில் சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதைச் சாதகமாக்கிக் கொண்டு முரளி தொடர்ந்து அத்துமீறிய நிலையில், ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாத சிறுமி தனது தாயிடம் அழுதுகொண்டே விபரத்தைக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாகப் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து முரளியைக் கைது செய்தனர். பாதுகாவலனாக இருக்க வேண்டிய வளர்ப்பு தந்தையே இந்த அசிங்கமான செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
