CRIME
அதிரடி திருப்பம்…! சினிமா ஸ்டைலில் கைவரிசை.. தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் சிக்கிய இன்ஸ்டா பிரபலம்..! தலைமறைவான முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு..!!
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடையில், கடை திறக்கப்பட்டு 15 நாட்களே ஆன நிலையில் 15 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 4 மணியளவில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவத்தில், வாடிக்கையாளர் போல் வந்து நோட்டமிட்ட தனி நபர் ஒருவர் எந்தவிதத் தடயமும் சிக்காமல் சினிமா பாணியில் கைவரிசை காட்டியுள்ளார். கடந்த 5ஆம் தேதியும் இதேபோன்று முகமூடி அணிந்து அவர் நோட்டம் பார்த்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரைக் கைது செய்ய 3 ஏ.சி தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, ஐதராபாத் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேருநகர், மாடக்குளம், பழங்காநத்தம், நாகமலை புதுக்கோட்டை, ரயில்வே நிலையம், சிக்னல்கள் மற்றும் டோல்கேட் சிசிடிவி கேமரா பதிவுகளை விடிய விடிய ஆய்வு செய்த போலீசார், நேற்று கொள்ளையனை நெருங்கினர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், மதுரை பழங்காநத்தம் அருள்ஜோதி நகரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் நிஷாந்தின் வீட்டில் போலீசார் மாலையிலிருந்து சோதனை நடத்தினர். சமூக வலைதளங்களில் தனது முகத்தை வெளிக்காட்டாமல் பதிவிட்டு வந்த நிஷாந்தின் தாய் மற்றும் தந்தையிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. தற்போது தலைமறைவாக உள்ள நிஷாந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இக்கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சர் மீனாட்சி மற்றும் தலைமறைவாக உள்ள நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நகைக்கடையின் உரிமையாளர் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், கொள்ளை போன நகையும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள நகையும் ஒன்றுதானா என்று பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள நிஷாந்தைப் பிடித்தால் மட்டுமே இக்கொள்ளையில் மேலும் தொடர்புடையோர் யார் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
