“எங்க அப்பாவைத் திட்டமிட்டுக் கொன்னுட்டாங்க…!” காவல் நிலைய மரணத்தில் மகன் உடைத்த பகீர் உண்மை.. மதுரையில் உச்சக்கட்ட பதற்றம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“எங்க அப்பாவைத் திட்டமிட்டுக் கொன்னுட்டாங்க…!” காவல் நிலைய மரணத்தில் மகன் உடைத்த பகீர் உண்மை.. மதுரையில் உச்சக்கட்ட பதற்றம்..!!

Published

on

மதுரை மாவட்டம் செக்கனூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தேனியைச் சேர்ந்த 42 வயதான சரக்கு வாகன ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தேவாரத்திலிருந்து மதுரைக்கு ஏலக்காய் மற்றும் மிளகாய்த்தூள் மூட்டைகளை ஏற்றிச் சென்றபோது வலதூர் ஏரிக்கரை அருகே இவரது வாகனம் தீப்பிடித்ததுடன், சுமார் 60 ஏலக்காய் மூட்டைகள் காணாமல் போனதாக விநியோக ஊழியர் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும் விசாரணைக்காகவும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட பாலகிருஷ்ணன், சனிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், இவ்வழக்கின் விசாரணை சிபி-சிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

இருப்பினும், காவல்துறையின் தற்கொலைக் கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ள பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை வாகனத்திற்கு அடியில் படுத்து கதறி அழுத பாலகிருஷ்ணனின் மகன் விகாஸ், தனது தந்தை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். காப்பீட்டுத் தொகையை முறைகேடாகப் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனமே விதிகளை மீறி சரக்குகளை ஏற்றி, திட்டமிட்டு தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும், இதற்கு முன்பும் அந்நிறுவனத்தில் இதேபோல் மூன்று முறை தீ விபத்துகள் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தீ விபத்து நடந்தபோது நிறுவன மேலாளர் நாகராஜ் வந்து தீயை அணைத்ததாகவும், வாகனத்தைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லாமல் நிறுவனத்தின் மையத்திற்கே எடுத்துச் சென்றுவிட்டு, தனது தந்தையை மட்டும் காவல்துறையிடம் சிக்கவைத்துவிட்டதாகவும் விகாஸ் குற்றம்சாட்டினார்.

Advertisement

மேலும், சம்பவத்தன்று மாலை தனது தந்தை தன்னிடம் தொலைபேசியில் பேசியபோது, அனைவரும் தப்பிப்பதற்காகத் தன்னை மாட்டிவிடப் பார்ப்பதாகவும், மேலாளர் நாகராஜும் ஏமாற்றிவிட்டதாகவும் வேதனையுடன் கூறியதாக விகாஸ் குறிப்பிட்டார். தனது தந்தையின் உடலில் லத்தியால் தாக்கப்பட்ட வீக்கம், நெற்றியில் இரும்புக் கம்பியால் அடித்த காயம், தோள்பட்டையில் கூர்மையான ஆயுதத்தால் குத்திய தழும்புகள் மற்றும் நகங்கள் பிடுங்கப்பட்ட அடையாளங்கள் இருப்பதாக அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். காவல்துறை வெளியிட்ட சிசிடிவி காட்சிகளில் அரைமணி நேரக் காட்சிகள் திட்டமிட்டு வெட்டப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டிய விகாஸ், முழுமையான சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் எனவும், உண்மை வெளிவர இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in