CRIME
தனிஷ்க் கொள்ளையில் அதிரடி திருப்பம்.. இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி காட்டிய இடம்.. தோண்டத் தோண்ட வெளியே வந்த தங்க நகைகள்..!!
மதுரையில் கடந்த அக்டோபர் 14 அன்று மூன்று மாடியுடன் திறக்கப்பட்ட தனிஷ்க் தங்க நகை கடையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து லாக்கர்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கடையின் தரைத்தளத்தில் விற்பனை நடைபெற்ற நிலையில், மூன்றாம் தளத்தில் லாக்கர் பொருத்தும் பணி மற்றும் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டிடத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த சாரம் வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருக்கலாம் என்ற கோணத்தில், ஒன்பது சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், யூடியூபர் நிஷாந்த் என்பவரின் தந்தை சுரேஷைக் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 5 கிலோ தங்க நகைகளையும் மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகள் புதைத்து வைக்கப்பட்ட இடத்தை இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி போலீசாருக்கு அடையாளம் காட்டினார். பின்னர் போலீசாரை ஒரு வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, அங்கு எருக்கலாஞ் செடியின் நடுவே புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் தோண்டி எடுக்கச் செய்து உதவினார்.
