LATEST NEWS
“என் பிள்ளையையும் கொன்னுடாதீங்க” அவரு வயித்துக்குள்ள எதுவும் வச்சிருக்கீங்களா..? அது AI வீடியோ.. உயிரிழந்த லாரி டிரைவரின் மனைவி கண்ணீர் கதறல்..!!
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரணம் குறித்து, அவரது மனைவி காவல்துறையினர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “அவரை போலீஸ் அடித்துதான் கொன்றிருக்கிறார்கள், உடலில் காயங்கள் உள்ளன. மூன்று நாட்களாக என் குடும்பத்தை அழ வைத்து ஏன் எங்களைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்? அவர் வயிற்றுக்குள் எதுவும் வைத்திருக்கிறீர்களா, அதையும் கூட எடுத்துக்கொண்டு போங்கள்” என அவர் கண்ணீருடன் கதறி அழுதுள்ளார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள் போலியானவை எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், “அந்த சிசிடிவி வீடியோ ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதுதான்” என்று தெரிவித்துள்ளார். மேலும், லாரி உரிமையாளர் இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காக, தவறை ஒப்புக்கொள்ளுமாறு தன் கணவரைக் காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும், எனவே லாரி உரிமையாளரையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை மீது தங்களுக்குத் துளியும் நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்ள பாலகிருஷ்ணனின் மனைவி, இந்த வழக்கை உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். “எனக்கு தமிழ்நாடு போலீஸ் விசாரணையே வேண்டாம்; என் பிள்ளை மட்டும்தான் எனக்கு என்று இருக்கிறான், அவனையும் கொன்றுவிட வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்” என அவர் அச்சத்துடன் கதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்தில் நிகழ்ந்த இந்த மர்ம மரணம் மற்றும் உயிரிழந்தவரின் மனைவியின் உருக்கமான வாக்குமூலம் மதுரை மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து உரிய நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
