CRIME
“நந்தினி தயிர் பாக்கெட்டிற்குள் ஜியோ சிம் கார்டா..?” வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை.. போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் உண்மை..!!
கர்நாடகாவின் பிரபல KMF நந்தினி தயிர் பாக்கெட்டிற்குள் ஜியோ சிம் கார்டு இருந்ததாகச் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ வழக்கில், காவல்துறை விசாரணையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மத்தூர் தாலுகா சன்னசந்திரா கிராமத்தைச் சேர்ந்த அருண் குமார் (35) என்பவர், தான் வாங்கிய நந்தினி தயிர் பாக்கெட்டிற்குள் சிம் கார்டு இருந்ததாகக் கூறி வெளியிட்ட வீடியோ கர்நாடகா முழுவதும் வைரலாகி, நந்தினி பொருட்களின் தரம் குறித்துப் பெரும் கேள்வியை எழுப்பியது. இதனையடுத்து, மன்முல் சந்தை மேலாளர் பிரசாத் அளித்த புகாரின் பேரில், மத்தூர் காவல் ஆய்வாளர் நவீன் தலைமையிலான போலீசார் வெள்ளிக்கிழமை மாலை அருண் குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், அந்த சிம் கார்டு தயிர் பாக்கெட்டிற்குள் இருக்கவில்லை என்பதும், அது அருண் குமாரின் மைத்துனர் பெயரில் பதிவு செய்யப்பட்டு அவரது மனைவி என். சுதா பயன்படுத்தி வந்த சிம் கார்டு என்பதும் கண்டறியப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பேருந்து நிலையம் அருகே உள்ள நந்தினி பாலகத்தில் தயிர் பாக்கெட்டை வாங்கிய அருண், அதனைத் தனது இருசக்கர வாகனத்தின் பையில் வைத்துள்ளார். அப்போது, ஏற்கனவே அந்தப் பையில் இருந்த சிம் கார்டு தயிர் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் ஒட்டிக்கொண்டுள்ளது. பின்னர் வீட்டிற்குச் சென்று பாக்கெட்டை வெட்டிப் பாத்திரத்தில் தயிரை ஊற்றியபோது, வெளிப்புறத்தில் ஒட்டியிருந்த சிம் கார்டும் தவறிப் பாத்திரத்திற்குள் விழுந்துள்ளது. இதனைச் சரியாகக் கவனிக்காத அருண், பாக்கெட்டிற்குள் இருந்துதான் சிம் கார்டு வந்ததாகத் தவறாக நினைத்து அவசரப்பட்டு வீடியோ எடுத்துப் பதிவிட்டுள்ளார்.
விசாரணையின் போது தனது தவறை ஒப்புக்கொண்ட அருண் குமார், அந்த சிம் கார்டு தனது மனைவியுடையது என்பதை உறுதிப்படுத்தியதோடு, தவறான புரிதலால் அவசரப்பட்டு வீடியோ வெளியிட்டதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கோரி மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும், நந்தினி பொருட்கள் தரமானவைதான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இதற்கிடையில், தனியார் பால் நிறுவனங்களுடன் தொடர்புடைய அருண் குமார், நந்தினி தயிரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இவ்வாறு செய்துள்ளதாக மன்முல் தலைவர் ஹரிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
