CRIME
பகீர்.. தாயைக் காப்பாற்றச் சென்ற 16 வயது மகன்… கதவை உள்பக்கமாகப் பூட்டி மது போதையில் தந்தை செய்த கொடூரம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!!
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவிற்கு உட்பட்ட சௌடநாயக்கனபாளையம் கிராமத்தில், பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுக்கச் சென்ற 16 வயது மகனைத் தந்தையே கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் சுனில் என்பது தெரியவந்துள்ளது. இவரது தந்தை நஞ்சேகவுடா மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏற்கெனவே தனது மனைவியைத் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நஞ்சேகவுடா தனது மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்க முயன்றுள்ளார். இதைக் கண்ட சுனில் தனது தாயைக் காப்பாற்றுவதற்காக இடையில் புகுந்து சண்டையைத் தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நஞ்சேகவுடா, தனது மனைவியை வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டுக் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டார். பின்னர் வீட்டிற்குள் இருந்த விவசாயக் கருவியால் தனது மகன் சுனிலைச் சரமாரியாகத் தாக்கியதில், அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த குனிகல் காவல்துறையினர், நஞ்சேகவுடாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
