CRIME
“அய்யோ காப்பாத்துங்க..” 6 வயது குழந்தையுடன் மனைவியை அறைக்குள் கணவன் செய்த கொடூர காரியம்…. போலீஸ் விசாரணையில் மனைவியின் வாக்குமூலத்தால் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!!
சென்னை மணலி சி.பி.சி.எல். நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், தம்பதியினரிடையே கடந்த சில ஆண்டுகளாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தாய் வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையிலும் நேற்று மீண்டும் கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பெண் தனது குழந்தையுடன் அறைக்குள் சென்று வெளியே வர மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கணவர் அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் பதற்றமடைந்த அந்த இளம்பெண், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததுடன், தானும் தனது குழந்தையும் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் காட்சியை வீடியோவாக எடுத்துச் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலானதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணலி காவல்துறையினர் பூட்டை உடைத்துத் தாயையும் குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அந்த இளம்பெண் தெரிவித்தார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சகோதரர் கூறுகையில், தனது சகோதரியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், இது குறித்து ஏற்கனவே பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, தனது சகோதரி மற்றும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
