CRIME
“ஏறுங்க வீட்டுல விடுறோம்..” ஆட்டோவில் ஏறிய மூதாட்டியின் நகை அபேஸ்.. மாஸ்டர் பிளான் போட்டு கைவரிசை காட்டிய கும்பல்.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சாலையில் நடந்து செல்லும் வயதான பெண்களுக்கு உதவி செய்வது போல ஆட்டோவில் ஏற்றி அவர்களின் நகைகளைத் திருடும் ‘குஜராத்தி கும்பலை’ காவல்துறையினர் பிடித்துள்ளனர். ஜெய்ப்பூரின் பாங்க்ரோட்டா பகுதியில் தங்களது முதல் திருட்டைச் செய்தபோதே சிக்கிய இந்த கும்பலைச் சேர்ந்த குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்த 19 வயது கிரிஷ் சோலங்கி மற்றும் அவரது அத்தை மகளான கவிதா பர்மார் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மாநிலங்களுக்கு இடையேயான கும்பல், புதிய நகரங்களுக்குச் சென்று வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி, அங்கு மூன்று அல்லது நான்கு திருட்டுச் சம்பவங்களை அரங்கேற்றிய பிறகு போலீசாரிடம் சிக்குவதற்கு முன்பாகவே வேறு நகரத்திற்குத் தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதே திட்டத்தின்படி சமீபத்தில் ஜெய்ப்பூர் வந்த இந்தக் கும்பலைச் சேர்ந்த கிரிஷ் மற்றும் கவிதா பஜ்ரி மண்டி சாலையில் உள்ள காளி மாதா கோவில் அருகே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்தனர். இவர்களின் மற்ற 3-4 கூட்டாளிகள் வெவ்வேறு பகுதிகளில் தங்கியிருந்த நிலையில், கடந்த நவம்பர் 11-ம் தேதி ஜுகல் கிஷோர் என்பவர் பாங்க்ரோட்டா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மூலம் இவர்களது செயல் வெளிச்சத்திற்கு வந்தது. அதில், பேருந்தில் இருந்து இறங்கி பஞ்சவடி காலனியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த தனது வயதான சகோதரி சோட்டா தேவியிடம், ஆட்டோவில் வந்த இரண்டு பெண்கள் வயதைக் காரணம் காட்டி வீட்டில் விடுவதாக ஆசைவார்த்தை கூறி நடுவில் அமர வைத்துள்ளனர்.
பின்னர் கமலா நேரு நகர் மேம்பாலம் அருகே அவர் இறங்கியபோது, கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை அந்த கும்பல் திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றது தெரியவந்தது. இப்புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகள் வந்து சென்ற பாதையைக் கண்டறிந்து அதிரடியாக சோதனை நடத்தி கிரிஷ் சோலங்கி மற்றும் கவிதா பர்மாரை கைது செய்ததோடு, திருட்டுக்குப் பயன்படுத்திய வாடகை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கிரிஷ் தனது மனைவி சிங்கு மற்றும் சகோதரி கவிதாவை வாடகை ஆட்டோவில் அழைத்துச் சென்று தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களைக் குறிவைத்தது தெரியவந்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள சிங்கு மற்றும் கும்பலின் மற்ற உறுப்பினர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
