CRIME
“என்னை யாரோ கொல்லப் பார்க்குறாங்க…” 70 வயது முதியவர் சொன்ன சில நாட்களிலேயே நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஏடாவின் நிதௌலி கலான் காவல் எல்லைக்குட்பட்ட லால்பூர் கிராமத்தில், 70 வயதான போஜ்ராஜ் என்ற கோயில் பூசாரி கயிறுகளால் கட்டப்பட்டு, செங்கற்களால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த உள்ளூர் கோயிலிலேயே தங்கிப் பூசைகள் செய்து வந்த இவரது சடலம், இன்று காலை அங்கிருந்த ஒரு கட்டிலில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்ததோடு, அருகில் செங்கற்கள் கிடந்ததால் கொலையாளிகள் செங்கல்லால் அடித்துக் கொன்றிருப்பது உறுதியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பே, இரவு நேரங்களில் கோயில் மீது யாரோ கல் வீசுவதாகவும், தன்னை யாரோ கொல்லப் பார்ப்பதாகவும் பூசாரி தனது உறவினர்களிடம் அச்சம் தெரிவித்திருந்த பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.
இந்தப் படுகொலை நடந்த அதே நேரத்தில், கோயில் வளாகத்தில் இருந்து வெறும் 250 மீட்டர் தொலைவில் பிரஜேஷ் குமார் (22) என்ற கிராமத்து இளைஞன் ஒருவன் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான். அவனது உடல்நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ஆக்ரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளான். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடயவியல் மற்றும் மோப்ப நாய் படையினர் முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ள நிலையில், பூசாரியின் கொலைக்கும், காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞனுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் கூடுதல் எஸ்பி ஸ்வேதாப் பாண்டே தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
