CRIME
“தனியாக வாழும் பெண்கள் தான் டார்கெட்” பகலில் மளிகை வியாபாரம்… இரவில் தொடர் கொலை… உடல்களை பைக்கில் கடத்தி எரித்த தாயும் மைனர் மகனும்… அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!
தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில், தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து தொடர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சக்கலி ரஜிதா (38) என்ற தாயும், அவரது மைனர் மகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி விஜயா என்ற பெண்ணின் பாதி எரிந்த சடலம் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் விவரங்களை ஆய்வு செய்த போலீஸார் இந்த அதிர்ச்சி தரும் சீரியல் கில்லர் கும்பலைக் கண்டறிந்தனர்.
கைது செய்யப்பட்ட ரஜிதா நடத்தி வந்த டீ மற்றும் மளிகைக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் குடும்பப் பின்னணியைக் கூர்ந்து கவனித்து இக்கொலைகளைத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, தனிமையில் வாழும் அல்லது குடும்பப் பிரச்சனை உள்ள பெண்களைத் தங்கள் கடைக்கு வரவழைத்து மூச்சுத் திணறடித்துக் கொன்று, நகைகளைப் பறித்துக் கொண்டு சடலங்களை வனப்பகுதிகளில் பெட்ரோல் ஊற்றி எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் இதற்கு முன்பும் ரேகா என்ற பெண்ணைக் கொலை செய்ததும், அன்னபூர்ணா என்பவரைத் தாக்கி தாலியைப் பறித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அடுத்ததாக ரஜிதாவின் கணவர் உட்பட மேலும் 4 பேரைக் கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளிடமிருந்து பைக், மொபைல் போன்கள், நகைகள் மற்றும் ரூ.1.03 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தாய் ரஜிதா நீதிமன்றக் காவலிலும், மைனர் மகன் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
