CRIME
“லஞ்சத்துலயும் ஒரு புதுமை..” 21 அங்கன்வாடி மையங்களில் மாமூல் வாங்கிய பெண் அதிகாரி.. ஏசிபி நடத்திய அதிரடி வேட்டை.. பரபரப்பு பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் மெட்பல்லி பகுதியில், அங்கன்வாடி மையங்களில் இருந்து மாதாந்திர இ.எம்.ஐமுறையில் லஞ்சம் வாங்கிய குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி தாரோஜு பத்மா, ஊழல் தடுப்புப் படையினரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். மெட்பல்லி வட்டத்தில் உள்ள 21 அங்கன்வாடி மையங்கள் மீது எந்தவொரு குறைபாடோ அல்லது எதிர்மறை அறிக்கையோ அளிக்காமல் இருப்பதற்காக இந்த அதிகாரி லஞ்சம் கேட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு மையத்திலிருந்தும் தலா ரூ.1,000 வீதம், 3 மாதங்களுக்கான மொத்தத் தொகையான ரூ.63,000 லஞ்சப் பணத்தை அவர் பெற்றுக்கொண்ட போது ஊழல் தடுப்புப் படை அதிகாரிகள் அதிரடியாகப் பாய்ந்து அவரைக் கைது செய்தனர்.
அங்கன்வாடி மையங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டிய ஒரு அரசு உயர் அதிகாரியே, தவணை முறையில் மாதந்தோறும் லஞ்சம் வசூலித்து வந்த இந்த அவலச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட அதிகாரி பத்மா மீது ஏசிபி அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் கூடுதல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
