CRIME
“அம்மா தான் கொன்னாங்க” 17 நாட்கள் நீடித்த கொடூர ரகசியம்.. கணவனைக் கொன்று, உடலை எரித்து மணலுக்குள் புதைத்த மனைவி.. மகனே காட்டிக்கொடுத்த பகீர் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில், கணவனின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஆத்திரமடைந்த மனைவி, அவரை லத்தியால் அடித்துக் கொலை செய்து, உடலை எரித்து மணல் குவியலில் மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உதய்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்பி ஆம்பா கிராமத்தில் இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது.
கொலை செய்யப்பட்ட 50 வயதான ராமா என்ற நபர், தனது 47 வயது மனைவி நஹுஜுபாயின் நடத்தையில் தொடர்ந்து சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்றும் இதேபோல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த நஹுஜுபாய் லத்தியால் கணவனை சரமாரியாகத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு ஆதாரங்களை முழுமையாக அழிக்க நினைத்த அந்தப் பெண், வீட்டின் பின்பக்க அறையில் கணவனின் உடலை எரித்துள்ளார். மேலும், அக்கம்பக்கத்தினருக்குச் சந்தேகம் வராமல் இருக்க எரியும் உடலின் மீது இரும்பு டிரம்மை மூடியதோடு, கணவனின் அடையாள அட்டைகள், அரசு ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். பின்னர் எஞ்சியிருந்த அரைகுறை உடல் பாகங்களை அந்த அறையிலிருந்த மணல் குவியலுக்கு அடியில் புதைத்து, சுமார் 17 நாட்களாக இந்த கொடூர ரகசியத்தை மறைத்து வைத்துள்ளார்.
இவர்களின் மூத்த மகன் ராகுல் குஜராத்தில் இருந்து கூலி வேலை முடிந்து ஊருக்குத் திரும்பியபோது, தந்தை பல நாட்களாகக் காணவில்லை என்பதை அறிந்தார். தாயின் பதில்களில் சந்தேகம் அடைந்து வீட்டின் பின்பக்க அறையை சோதித்தபோது, மணல் குவியலுக்குள் மனித உடல் பாகங்கள் இருப்பதை கண்டறிந்து காவல் துறைக்குத் தகவல் அளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் உடல் பாகங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கொலை மற்றும் சாட்சியங்களை அழித்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியான நஹுஜுபாயைக் கைது செய்துள்ளனர்.
