CRIME
“கோடி சொத்தை காதலிக்கு கொடுத்துருவாரோ.?” தொழிலதிபர் கொலையில் கைதான மகன் கொடுத்த பகீர் வாக்குமூலம்.. விசாரணையில் அம்பலமான உண்மை..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல தொழிலதிபர் வினீத் மனோச்சா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரைக் கொடூரமாக சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கான்பூர் காவல்துறை, குற்றவாளிகளைக் கண்டறிய தீவிர விசாரணையில் இறங்கியது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தின் சொத்து தகராறே இந்த கொலைக்கு முக்கியக் காரணம் என்பது தெரியவந்தது. வினீத் மனோச்சாவிற்கும் அவரது மகன் சுப்ரத் மனோச்சாவிற்கும் இடையே சொத்துக்களைப் பிரிப்பது மற்றும் நிதி விவகாரங்களில் நீண்ட காலமாக மனக்கசப்பும் மோதலும் நிலவி வந்துள்ளது. தந்தை தன் கைவசம் உள்ள பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைத் தனக்குத் தர மறுத்ததாலும், தந்தை அவருடைய காதலிக்கு கொடுத்து விடுவாரோ என்ற பயத்திலும் சுப்ரத் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
சொத்து ஆசையில் கண்மூடித்தனமான மகன் சுப்ரத், வாடகை கொலையாளிகளை ஏவி தந்தையைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் மகன் சுப்ரத் மனோச்சாவை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் இதில் தொடர்புடைய வாடகை கொலையாளிகளையும் காவல்துறை வலைவீசித் தேடி வருகிறது.
