CRIME
“இது என்னப்பா கூத்து.. மருத்துவர்கள் ‘டெட்’ என சொன்னார்…” ஆனா ஆம்புலன்ஸில் முதியவருக்கு நடந்த அந்த அதிசயம்.. டாக்டரே மிரண்டு போன மிராக்கிள் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில், இறந்துவிட்டதாக மருத்துவர்களால் தவறாகக் கருதப்பட்ட முதியவர் ஒருவர், இறுதிச் சடங்கிற்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும்போது திடீரென உயிர்பெற்று எழுந்து உட்கார்ந்த அரிய விந்தைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனுகுலா கிராமத்தைச் சேர்ந்த சீகடி சங்கரய்யா என்ற இந்த முதியவர், கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக கரீம்நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சனிக்கிழமையன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்தக் கிராமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும், ஜோகாபூர் என்ற பகுதிக்கு அருகே ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது, இறந்ததாக நினைத்த சங்கரய்யா திடீரென கண் விழித்து எழுந்து அமர்ந்தார். இதனால் ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் அடைந்த வியப்பிற்கும் அதிர்ச்சிக்கும் எல்லையே இல்லை. உடனடியாக அவர் வேமுலவாடாவில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை தற்போது சீராகவும் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியும் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தங்களது தந்தை இறந்துவிட்ட செய்தி கேட்டு வளைகுடா நாடுகளிலிருந்து பதறியடித்துக் கிளம்பிய அவரது மகன்களும் குடும்பத்தினரும், சங்கரய்யா உயிருடன் இருக்கிறார் என்ற அதிசயச் செய்தியைக் கேட்டு பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். இந்த அபூர்வ நிகழ்வைக் கேள்விப்பட்டு, அந்த முதியவரை நேரில் காண்பதற்காக கிராம மக்கள் பெருமளவில் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
