CRIME
“ஆதாரம் இருந்தால் போலீஸிடம் கொடுங்கள்..!” தந்தைக்காகப் போராடிய மகள்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தோசைக் கடை உரிமையாளருக்குச் சவால் விட்ட வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் மஹ்மூர்கஞ்ச் பகுதியில், தங்கள் தந்தை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரபல தோசைக் கடை ஒன்றைச் சூறையாடிய மகள்கள் மீது மிரட்டிப் பணம் பறித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் அந்தப் பெண்கள் மீது மாமூல் மற்றும் பணம் கேட்டு மிரட்டியதாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மகள்களில் ஒருவரான தனிஷா, தாங்கள் யாரிடமும் ஒரு ரூபாய் கூட மாமூல் கேட்கவில்லை என்றும், திட்டமிட்டுத் தங்கள் மீது பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் பணம் கேட்டு மிரட்டியதற்கான ஒரு சிறிய ஆதாரம் இருந்தால் கூட, கடை உரிமையாளர் அதை உத்தரப் பிரதேச காவல்துறையிடம் ஒப்படைக்கட்டும்; ஆனால், அந்தக் கும்பல் ஒன்றாகச் சேர்ந்து என் தந்தையைத் தாக்கியதற்கான பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன, புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என தனிஷா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் தாங்களாகவே திரட்டிய ஆதாரங்களில் பாதியைக் கூட உத்தரப் பிரதேச காவல்துறையினர் முறையாகத் திரட்டி விசாரணை நடத்தியிருந்தால், இன்று அவர்கள் இப்படி நீதிமன்றப் படிகளிலும் காவல் நிலையங்களிலும் அலைக்கழிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டிருக்காது என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.
