CRIME
“என் மகள் திரும்பி வருவாள்..” 160 நாட்களாகக் கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோர்.. உயர் நீதிமன்ற உத்தரவால் மீண்டும் சூடுபிடிக்கும் தேடுதல் வேட்டை..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி மண்டலத்திற்குட்பட்ட சி.எச். அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஞானேஸ்வரி, காணாமல் போய் 160 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவரைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 6-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி ஞானேஸ்வரியுடன், அவர்களது செல்ல நாயும் உடன் சென்று மாயமானது. இதில் மூன்று நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய அந்தச் செல்ல நாய் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், சிறுமியை மட்டும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள் வனத்துறை மற்றும் காவல்துறையினர் எனப் பல்வேறு தரப்பினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் சிறுமியின் நிலை என்னவானது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
தங்கள் மகள் நிச்சயம் உயிருடன் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையில் 160 நாட்களாகக் கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோரின் வேதனையைத் தொடர்ந்து, தற்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தேடுதல் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்ட கூடுதல் எஸ்.பி தேவராஜ் மணீஷ் பாட்டீல் மேற்பார்வையில், மூன்று ஆய்வாளர்கள் மற்றும் நான்கு உதவி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புப் படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், சிறுமி ஞானேஸ்வரி இருக்கும் இடம் குறித்துத் துப்பு கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
