LATEST NEWS
அடப்பாவிங்களா நீங்களாம் மனுஷங்களா..? “என் பிள்ளைய தூக்கிட்டு போயிட்டாங்க சார்” 1.5 லட்சம் கடனுக்காக 6 மாதப் பச்சிளம் குழந்தையைத் தூக்கிச் சென்ற கந்துவட்டி கும்பல்… போலீசில் கதறியழுத தாய்..!!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் தொட்டம்பேடு மண்டலத்தில் உள்ள சிவநாதபாளையம் கிராமத்தில், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் 6 மாதப் பச்சிளம் குழந்தையைக் கடன் கொடுத்தவர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஆதி மற்றும் மேகமாலா தம்பதியினர், சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி அலுவலகம் எதிரே வசிக்கும் வெங்கடகிரி, முனியம்மா, பிரசாத் மற்றும் மோகன் ஆகியோரிடம் 5 ரூபாய் வட்டிக்கு ரூ. 1,50,000 கடன் வாங்கியுள்ளனர்.
வாங்கிய கடனுக்கான அசல் மற்றும் வட்டித் தொகையைத் தம்பதியினரால் உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடன் கொடுத்தவர்கள், சிவநாதபாளையத்தில் உள்ள ஆதி மற்றும் மேகமாலாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கடனுக்கு ஈடாக அவர்களின் 6 மாதக் குழந்தையைப் பறித்துச் சென்றுள்ளனர்.
கடன் வசூலுக்காகத் தங்கள் பச்சிளம் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டதாகக் குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்துப் புகாரின் பேரில் உடனடியாகக் களமிறங்கிய காவல்துறையினர், குழந்தையை மீட்கவும், இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
