CRIME
“அடக்கடவுளே.. திருமணமான 11 மாதங்களிலேயே இப்படியா..?” 25 வயது இளம்பெண் மர்ம மரணம்… போலீஸ் கணவரால் நடந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பலியா பகுதியில், திருமணமான 11 மாதங்களிலேயே 25 வயதான இளம்பெண் சலோனி குப்தா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பதினொரு மாதங்களுக்கு முன்பு, தங்கள் மகள் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் பல கனவுகளோடும் சலோனியைத் திருமணம் செய்து அனுப்பி வைத்த பெற்றோர், இன்று அவரது மரணத்திற்காகக் கதறி அழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திருமணமான நாள் முதலே கணவர் வீட்டார் சலோனியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மீண்டும் மீண்டும் சித்ரவதை செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இதில் மிகுந்த வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், உயிரிழந்த சலோனியின் கணவர் அவ்னேந்திர குப்தா மிர்சாபூரில் காவலராகப் பணியாற்றி வருபவர் ஆவார். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய சீருடையை அணிந்த ஒருவரே, தனது சொந்த மனைவியைப் பாதுகாக்கத் தவறியதோடு வரதட்சணைக் கொடுமைக்குத் துணை போனதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தங்களது மகளுக்கு உண்மையில் என்ன நடந்தது எனக் கேள்வி எழுப்பி சலோனியின் குடும்பத்தினர் நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், காவலர் அவ்னேந்திர குப்தா மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மூவரையும் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
