LATEST NEWS
குடும்ப அரசியலில் அதிரடித் திருப்பம்..! தம்பி அன்புமணிக்கு செக் வைக்க அக்கா காந்திமதி புது வியூகம்.. தமிழ்நாட்டில் கால்பதிக்கும் என்.ஆர். காங்கிரஸ்..!!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகளும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் சகோதரியுமான காந்திமதி பரசுராமன், தனது மகன் முகுந்தனுடன் புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே மீண்டும் ஏற்பட்ட அரசியல் இணக்கத்தைத் தொடர்ந்து, கட்சியில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக காந்திமதி அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், புதுச்சேரியைத் தாண்டி தமிழ்நாட்டிலும் தனது அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள ரங்கசாமி, அதற்கு காந்திமதியையும் அவரது மகனையும் பயன்படுத்திக் கொள்ள வியூகம் வகுத்துள்ளார்.
இதன் மூலம், தமிழ்நாட்டில் என்.ஆர். காங்கிரஸின் மாநிலத் தலைமைப் பொறுப்பிற்கு காந்திமதியின் குடும்பத்தை முன்னிறுத்த ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக அவரது மகன் முகுந்தனுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாவட்டங்களில் பாமக வலுவாக உள்ள வன்னியர் சமூக வாக்கு வங்கியை குறிவைத்து இந்த நகர்வு திட்டமிடப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸுக்கு அரசியல் ரீதியாக செக் வைக்கவும், தங்களின் பாரம்பரிய ஆதரவுப் பகுதிகளில் கோலோச்சவும் காந்திமதியும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளக் கணக்கு போடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்
