LATEST NEWS
“MLA ஷாப்பிங் தெரியுது… மக்கள் கஷ்டம் தெரியலையா..?” விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் மாதிரி எல்லாத்துலயும் ஸ்டிக்கர் ஒட்டுனா போதுமா..?” தமிழக அரசை கிழித்துத் தொங்கவிட்ட ஸ்டாலின்..!!
சட்டமன்ற உறுப்பினர்களை ஷாப்பிங் செய்வதில் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட ஷாப்பிங் செய்ய முடியாத அளவிற்கு அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது என்பது தெரியுமா என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விசாரித்தபோது, 4 மாதங்களுக்கு முன்பிருந்த விலையை விட அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்து அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்பதாகவும், ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா என்றும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் வினவியுள்ளார்.
இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்த நிலையிலும், கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத ‘Waste’ ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance TN’-இல் இருந்த அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகவும் செய்திகள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவற்றில் கவனம் செலுத்தாமல், “விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்” என்பது போல எல்லாவற்றிலும் ‘வெற்றி’ என ஸ்டிக்கர் ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவித்து வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
