LATEST NEWS
“இது அற்ப அரசியல், மாநில உரிமைகள் சிதைந்துவிட்டது..!” முதலமைச்சர் விஜய் மீது ஸ்டாலின் பாய்ச்சல்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
மத்திய-மாநில உறவுகளை ஆராய்வதற்காகத் தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் குழுவை தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் கலைத்திருப்பதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவெக அரசு தனது அற்ப அரசியலுக்காக இந்தச் சிறப்பான குழுவைக் கலைத்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் சிதைத்துவிட்டதாக விவரித்துள்ளார். மேலும், ஒரு மிகச் சிறந்த குழுவைப் பாதியிலேயே கலைத்த சிறுமைதான் முதலமைச்சர் விஜய்க்கு உண்டு என்றும் அவர் சாடியுள்ளார்.
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள், அதிகாரப் பகிர்வு குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவே குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தில் அமைத்திருந்தார். இத்தகைய ஒரு உயர்மட்டக் குழு செய்த ஆழமான பணிகளை வேறு எவராலும் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தவெக அரசின் இந்த நடவடிக்கை மாநில தன்னாட்சிக்கு எதிரானது என விமர்சித்துள்ளார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதலமைச்சர் விஜய் இக்குழுவைக் கலைத்திருப்பது, தற்போதைய தவெக மற்றும் திமுக இடையே ஒரு புதிய அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.
