LATEST NEWS
“பசியோடு இருக்கவனுக்கு பிரியாணி கொடுத்தா…” சீமானின் அந்த ஒரு பதில்..! அம்பாசமுத்திரத்தில் உடையும் சீக்ரெட் பிளான்..!!
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க. வேட்பாளரை எதிர்த்து சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த திடீர் அரசியல் மாற்றத்துக்கான காரணமும் தற்போது கசிந்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 107-ல் இருந்து 109 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் த.வெ.க. அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க 9 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால், 5 தொகுதிகளுக்குத்தான் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அந்த 5 தொகுதிகளிலும் வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பறித்துவிட த.வெ.க. முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில், தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை இடைத்தேர்தலில் த.வெ.க.வின் வெற்றியை தடுக்க திட்டமிட்டு வருகின்றன. சமீபத்தில் திருமண விழா ஒன்றில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “6 மாதங்களுக்குக்கூட த.வெ.க. அரசு தாங்காது” என்று பேசினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சு, தமிழகத்தில் த.வெ.க. அரசை கலைக்க முயற்சி நடக்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் தற்போதைய அரசியல் பரபரப்பாக, இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சீமானிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, “தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகள் தங்களுக்கு பெருந்தன்மையுடன் ஆதரவு அளித்தால், அதை ஏற்க தயாராக இருக்கிறோம். பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வான்” என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். அதே நேரத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோ, “முதலில் தேர்தல் தேதி முறையாக அறிவிக்கப்படட்டும். அதன்பிறகு தி.மு.க.வின் நிலைப்பாட்டை அறிவிக்கிறோம்” என்று ‘டுவிஸ்ட்’ வைத்து பேசினார். சீமானை பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘அ.தி.மு.க. போட்டியிடுவதே நியாயம்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
