LATEST NEWS
ஐயோ பாவம்..! மனுஷங்க பண்ண ஒரு சின்னத் தப்பு… 10 நாட்கள் போராடி துடிதுடிச்சு பறிபோன அபூர்வ உயிர்… மிருகக்காட்சிசாலையில் பெரும் சோகம்..!!
வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி மிருகக்காட்சிசாலையில், உலகப் புகழ்பெற்ற ‘பியோனா’ என்ற 9 வயது பெண் நீர்யானை, பார்வையாளரின் கம்பளித் தொப்பியை விழுங்கியதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சிசாலைக்கு கடந்த 8-ம் தேதி வந்த பார்வையாளர் ஒருவர், குழந்தைகளுக்கான கம்பளித் தொப்பி ஒன்றை விளையாட்டாக காற்றில் தூக்கி எறிந்துள்ளார். அந்த தொப்பி அங்கிருந்த பெரிய மின்விசிறியில் பட்டு, பியோனா வசிக்கும் பகுதியின் சிறிய இடைவெளி வழியாக உள்ளே விழுந்த நிலையில், எதிர்பாராத விதமாக அதை பியோனா விழுங்கியுள்ளது.
இதையடுத்து நீர்யானையின் உடல்நிலை சரியில்லாமல் போனது. சுமார் 2,400 பவுண்டுகளுக்கும் (சுமார் 1,088 கிலோ) அதிகமான எடை கொண்ட வளர்ந்த நீர்யானைக்கு அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தானது என்பதால், கால்நடை மருத்துவர்கள் மாற்று வழிகளில் தொப்பியை வெளியேற்ற முயன்றனர். அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 9 அடி நீளமுள்ள சிறப்பு கொலோனோஸ்கோப்பி கருவி மூலம் தொப்பியை எடுக்க முயற்சி செய்யப்பட்டது; மேலும், செரிமானப் பாதையைத் தூண்டுவதற்காகக் குதிரைப் பண்ணையிலிருந்து வரவழைக்கப்பட்ட அதிர்வுப் பலகை பயன்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவக் குழுவினர் தீவிரமாகப் போராடிய போதிலும், தொப்பி செரிமானப் பாதையில் சிக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளால் பியோனாவின் உடல்நிலை மோசமடைந்து, நேற்று (வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சின்சினாட்டி மிருகக்காட்சிசாலை நிர்வாகம் சோகத்துடன் அறிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், குறிப்பிட்ட காலத்திற்கு 6 வாரங்களுக்கு முன்பே வெறும் 13 கிலோ எடையுடன் பிறந்து, உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையிலிருந்து மீண்டு வந்த பியோனா, சமூக வலைதளங்களில் உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தது. பொதுவாக நீர்யானைகள் 40 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழும் நிலையில், 9 வயதிலேயே பியோனா உயிரிழந்தது விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
