LATEST NEWS
“கைது செய்வதானால் செய்யுங்கள்.. தூக்கு மேடையில் ஏற்றினாலும் கவலை இல்லை!” பிரதமர் மோடி போஸ்டர் விவகாரத்தில் வழக்குப் பாய்ந்ததால் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா ஆவேசம்..!!!
பிரபல பெங்காலித் திரைப்பட நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் அவதூறான போஸ்டரைக் கையில் ஏந்தியதாக அவர் மீது கொல்கத்தாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தாவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் மாணவர்கள் நடத்திய வீதிப் போராட்டத்தில் நடிகை ஸ்ரீலேகா மித்ராவும் பங்கேற்றார். அப்போது, அவர் பிரதமரை இழிவுபடுத்தும் வகையிலான போஸ்டர் ஒன்றை கையில் பிடித்திருந்ததாகக் புகைப்பட ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாஜாக மூத்த பெண் தலைவர் கேயா கோஷ், கொல்கத்தாவின் ஆனந்தபூர் காவல் நிலையத்தில் ஸ்ரீலேகா மித்ராவுக்கு எதிராக நேற்று முறையான புகார் ஒன்றை அளித்துள்ளார். நாட்டின் பிரதமரை இழிவுபடுத்தியதற்காக நடிகையை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (பிரிவு 352), தூண்டுதல் (பிரிவு 353) மற்றும் அவதூறு பரப்புதல் (பிரிவு 356) ஆகிய 3 கடுமையான பிரிவுகளின் கீழ் நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்துத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ரீலேகா மித்ரா, “என்னை நீங்கள் கைது செய்ய விரும்பினால் தாராளமாகச் செய்யுங்கள்; அல்லது தூக்கு மேடையில் ஏற்ற விரும்பினாலும் ஏற்றுங்கள், இதற்கு எதிராகவும் ஒரு மக்கள் இயக்கம் வெடிக்கும் என நான் நம்புகிறேன்” என்று ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார். மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற முன்னணி நடிகை மீது பிரதமர் அவதூறு வழக்குப் பாய்ந்திருப்பது மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
