LATEST NEWS
“நான் 56 வயசு ‘இளைஞரை’ சொல்லல!”.. ராகுல் காந்தியை மறைமுகமாகத் பங்கம் செய்த பிரதமர் மோடி.. கொதிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்..!!
ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், முற்றிலும் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட என்ஜின்களைக் கொண்ட ‘விக்ரம்-1’ ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 24 மீட்டர் உயரமும், 350 கிலோ எடையை சுமக்கும் திறனும் கொண்ட இந்த ராக்கெட்டில் விக்ரம் சாராபாய், சர் சி.வி.ராமன் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் நுண் சிற்பங்கள் அடங்கிய பேலோடும் அனுப்பப்பட்டது. இச்சாதனையைக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “விண்ணில் சாதனை படைத்த இந்த தனியார் நிறுவன ஊழியர்களின் சராசரி வயது 28 தான்; நான் 56 வயது இளைஞர்களைப் பற்றிப் பேசவில்லை. விண்வெளியில் இந்தியக் கொடியை நாட்டிய இந்த இளைஞர்களே நாட்டிற்குத் தன்னம்பிக்கை அளிக்கிறார்கள்” எனப் பாராட்டிப் பேசினார்.
இதனையடுத்து பிரதமரின் இந்த ’56 வயது இளைஞர்’ பேச்சு, மறைமுகமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் கிண்டல் செய்வதாக அமைந்துவிட்டது என காங்கிரஸ் தரப்பில் வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்துக் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன், பிரதமரின் இத்தகைய பேச்சு வெட்கக்கேடானது என்று சாடினார். மேலும், ராகுல் காந்தி பிரதமரிடம் வேலை கேட்கவில்லை என்றும். நாட்டில் 20 முதல் 26 வயதுடைய இளைஞர்கள் அரசு வேலை கிடைக்காமலும், நிலங்களை விற்றுப் படித்தும் வினாத்தாள் கசிவு போன்ற சிக்கல்களால் வேலையின்றித் தவிப்பதைப் பற்றியுமே ராகுல் காந்தி கவலைப்படுகிறார் என்றும் அவர் காட்டமாகப் பதிலளித்தார்.
