LATEST NEWS
“என் குடும்பம் பட்ட வலி யாருக்கும் வரக்கூடாது..” காதலுக்காக உலகையே சைக்கிளில் வலம் வந்து கின்னஸ் சாதனை படைத்த முதியவர்.. உருக வைக்கும் பின்னணி..!!!
புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த தனது அன்பான மனைவியின் நினைவாகவும், புற்றுநோய் விழிப்புணர்விற்காகவும் கனடா நாட்டைச் சேர்ந்த மார்க் ஹெர்ப்ஸ்ட் என்ற 69 வயது முதியவர் 324 நாட்களில், 25 நாடுகளைக் கடந்து, சுமார் 30,000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு புதிய உலகக் கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். இவரது மனைவி ஜாக்கி, 7 ஆண்டுகள் புற்றுநோயுடன் போராடி கடந்த 2021-இல் தனது 55-வது வயதில் உயிரிழந்தார். இந்தத் துயரத்திலிருந்து மீள முடியாத மார்க், ஆரோக்கியம் இருக்கும் போதே வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த உலகைச் சைக்கிளில் வலம் வர முடிவு செய்தார். கடந்த 2025 ஜனவரி 8 அன்று தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர், தான் தன் மனைவியுடன் செல்ல நினைத்த உலகப் புகழ்பெற்ற இடங்களில் மனைவியின் அஸ்தியைத் தூவி அஞ்சலி செலுத்தியபடி, 324 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பாங்காக்கிற்கு வந்தடைந்தார். இதன் மூலம், நியூசிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் பென்னட் (66) என்பவரின் சாதனையை முறியடித்து, ‘உலகைச் சைக்கிளில் சுற்றிவந்த மிக வயதான நபர்’ என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார்.
மார்க் தனது இந்த அசாத்திய உலகப் பயணத்தின் மூலம் புற்றுநோய்க்கு எதிரான போருக்காகப் பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டளைக்கு சுமார் 67,746 டாலர்களை நிதியாகத் திரட்டி வழங்கியுள்ளார். தன் குடும்பம் அனுபவித்த வலியை வேறு எந்தக் குடும்பமும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக இந்த நிதியை அவர் வழங்கியுள்ளார். தனது பயணத்தின் போது மலேசிய போலீசார் தனக்குப் பாதுகாப்பு அளித்து உதவியதையும், ஆஸ்திரேலியாவில் முகம் தெரியாத பெண் ஒருவர் தனது கஃபேயிலேயே தங்குவதற்கு இடம் கொடுத்ததையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட மார்க், தற்போது தனது பயண அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார். “நாம் தொடர்ந்து உடலளவிலும் மனதளவிலும் புதிய சவால்களை எதிர்கொண்டு வளர வேண்டும், இல்லையெனில் நாம் இறந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்” என்ற உன்னத செய்தியோடு தனது ஓய்வு காலத்தை அவர் மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறார்.
