LATEST NEWS
“அடேங்கப்பா… 9 அடி நீளத்துக்கு முடியா…? 2015-லிருந்து முடியவே வெட்டாம கின்னஸ் சாதனை… உலகையே திரும்பிப் பார்க்க வச்ச உத்தரகாண்ட் பெண்..!!”
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால் வாழும் பெண்களிலேயே மிக நீளமான கூந்தலைக் கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இவருடைய கூந்தலின் நீளம் 271.50 சென்டிமீட்டர் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் ஹல்ட்வானியில் மேற்கொள்ளப்பட்ட அளவீட்டுச் சரிபார்ப்புக்குப் பிறகு, முந்தைய சாதனையான 257.33 செ.மீ-ஐ முறியடித்து இவர் இச்சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். 2015-ஆம் ஆண்டு முதல் தனது முடியை வெட்டாமல் வளர்த்து வரும் ரேணு, இந்திய கலாச்சாரத்தில் நீண்ட கூந்தல் என்பது அழகு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகக் கருதப்படுவதால் ஈர்க்கப்பட்டு இ முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 9 அடி நீளமுள்ள கூந்தலைப் பராமரிப்பது மிகவும் சவாலானது என்பதால், ரேணு தன் முடியைச் சுத்தமாகக் கழுவுவதற்கும், உலர்த்துவதற்கும், சிக்கெடுப்பதற்கும் தினசரி பல மணி நேரங்களைச் செலவிடுகிறார். செயற்கை இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வீட்டிலேயே தயாரிக்கும் இயற்கை தலைமுடி எண்ணெய்கள் மற்றும் ஷாம்பூக்களைப் பயன்படுத்தி வருகிறார். மேலும், இத்தகைய பாரம்பரிய இயற்கை முடி பராமரிப்பு முறைகளையும் அழகு குறிப்புகளையும் தனது இணையதளப் பக்கங்கள் வாயிலாகப் பகிர்ந்து, இரசாயனமற்ற முடி பராமரிப்பைப் பின்பற்றுமாறு மற்றவர்களையும் ஊக்குவித்து வருகிறார்.
https://www.instagram.com/p/DbvDjYDl5To/?utm_source=ig_web_button_share_sheet
இந்த கின்னஸ் சாதனை மூலம் ரேணு உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளார். வெறும் உலக சாதனையைத் தாண்டி, தனது சொந்த ஊருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கவும், மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கவும் விரும்புவதாக ரேணு கூறுகிறார். “மனஉறுதி, தொடர் முயற்சி மற்றும் நமது இயற்கை அழகோடும் கலாச்சாரத்தோடும் இணைந்திருக்கும் பண்பு இருந்தால், எந்தவொரு பெரிய இலக்கையும் அடைய முடியும்” என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். பல ஆண்டுகால பொறுமையும் அர்ப்பணிப்பும் ரேணு தாரியாலையும் அவரது ஊரையும் உலக வரைபடத்தில் பொறிக்கச் செய்துள்ளது.
