CRIME
“அடப்பாவமே…! சின்னப் பசங்களை எதுக்குப்பா அடிக்கிறீங்க..?” தடுத்துக் கேட்ட பெண்ணை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்த கொடூரம்..! உ.பி.யில் பதற வைக்கும் சிசிடிவி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் பாக்பாடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுவர்கள் தகராறில் தலையிட்டுத் தடுக்க முயன்ற பெண் ஒருவரை அக்கம் பக்கத்தினர் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாக்பாடா நகரின் பெங்காலி வாலி தெருவில் வசிக்கும் பூஜா என்ற பெண், தங்கள் பகுதி சிறுவர்களை அண்டை வீட்டார் அடிப்பதைக் கண்டு, “சிறுவர்களை அடிக்காதீர்கள்” என்று மட்டும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்டை வீட்டார், அப்பெண்ணுடன் தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வினய் மற்றும் தக்ஷ் ஆகிய இரு இளைஞர்கள் அந்தப் பெண்ணைத் தெருவில் விரட்டி விரட்டிச் செருப்பாலும், கைகளாலும், கால்களாலும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும், தாக்குதலின் போது அப்பெண்ணின் காதில் இருந்த தங்கத் தோடுகளைப் பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த 4 நிமிடக் கொடூர தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரத்தக் காயங்களுடன் காவல் நிலையம் வந்தடைந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பாக்பாடா காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சார்பு ஆய்வாளர் சுகேஷ் குமாரிடம் விசாரணைப் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து நகர் காவல் கண்காணிப்பாளர் குமார் ரண்விஜய் சிங் கூறுகையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள முதன்மை குற்றவாளி வினய்யைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
