LATEST NEWS
நீண்ட நேரமாக திறக்காத கதவு.. உடைத்து பார்த்ததும் உறைந்து போன காவலர்கள்.. குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்..! நடந்தது என்ன..?!
உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜார்ச்சா காவல் நிலையத்தின் குளியலறையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் இறந்து கிடந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரமாக குளியலறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த சக காவலர்கள், கதவை உடைத்து பார்த்தபோது, பெண் ஆய்வாளர் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மூத்த காவல் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர்.
காவல்துறையின் தகவலின்படி, உயிரிழந்தவர் ரஷ்மி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 2023-ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார் மற்றும் சொந்த ஊர் கான்பூர் ஆகும். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜார்ச்சா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவரது திடீர் மரணம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டி.சி.பி. ஸ்ரவன் குமார் அவர்களின் கூற்றுப்படி, முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பு காரணமாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், இறப்புக்கான உண்மையான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் வந்த பின்னரே பிரேதப் பரிசோதனை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
