LATEST NEWS
“என்னை பழிவாங்குறாங்க..! கட்சியை விட்டு விலகியதால் வயிறெரிச்சல்..!” பஞ்சாப் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்… ஆம் ஆத்மி அரசு மீது ராகவ் சதா பாய்ச்சல்..!!
2022-ல் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகவ் சதா, கட்சியின் நிலைப்பாட்டை அவையில் எதிரொலிக்கவில்லை எனக் கூறி அவரது பதவிகள் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், பஞ்சாபில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வரும் சூழலில், ஆகஸ்ட் 13 அன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் அவர் பஞ்சாபில் இருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து சென்றுவிட்டதாகக் கூறி அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் சேர்த்து மொத்தம் 20.66 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தனது பெயர் நீக்கப்பட்டது குறித்து ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டியுள்ள ராகவ் சதா, “இது சாதாரண அலுவல் பிழையாகத் தெரியவில்லை; அரசியல் பழிவாங்கல். ஊழல் நிறைந்த ஆம் ஆத்மியில் இருந்து நான் விலகியதில் இருந்தே அதன் தலைமை ஆத்திரத்தில் இருக்கிறது. கட்சியில் இருந்து விலகியவர்களை பழிவாங்க தனக்கு இருக்கும் மாநில அரசு நிர்வாக அதிகாரத்தை ஆம் ஆத்மி பயன்படுத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், பஞ்சாபின் மொஹாலி தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்த தனது பெயர் நீக்கப்பட்டதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது வெளியாகி இருப்பது வரைவு பட்டியல் மட்டுமே என்பதால், அதில் ஆட்சேபனை தெரிவிக்க செப்டம்பர் 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தவறைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ராகவ் சதா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ள பஞ்சாப் மாநிலத்தில், அனைத்துத் திருத்தங்களுக்கும் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளது.
