LATEST NEWS
“ஆளே மாறிட்டீங்க மோடி ஜி..” காங்கிரஸ் தலைவர் திருமணத்தில் பிரதமர்..? தீயாய் பரவிய வீடியோவின் பின்னணியில் மெகா உருட்டு..!!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்சந்திர பவாரின் மகளும் எம்.பியுமான சுப்ரியா சுலேயின் மகள் ரேவதி சுலேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 10 அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் பின்னணியில், பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தியுடன் கலகலப்பாகப் பேசுவது போன்ற வீடியோ ஒன்று ரேவதி சுலேயின் திருமண வரவேற்பில் எடுக்கப்பட்டது எனக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வந்தது.
வைரலாகும் அந்த வீடியோவில் பிரதமர் மோடியைப் பார்த்து கார்கே, “நீங்கள் ஆள் கொஞ்சம் மாறிவிட்டீர்கள்” எனக் கூற, அதற்கு மோடி “ஓ அப்படியா” எனக் கேட்பதும், பிரியங்கா காந்தியுடன் நலம் விசாரிப்பதும் பதிவாகியுள்ளது. உண்மைச் சரிபார்ப்பில், இந்த வீடியோ ‘கவுண்டே சிங்’ என்ற இன்ஸ்டாகிராம் பயனரால் கடந்த 2025-ஆம் ஆண்டே பதிவேற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் மகன் திருமண விழாவின் போது எடுக்கப்பட்ட பழைய காட்சிகள் இவை என்பதும், கடந்த ஆண்டிலிருந்தே இந்த வீடியோ இணையத்தில் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற ரேவதி சுலேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையின் நிறமும், இந்த வைரல் வீடியோவில் அவர் அணிந்திருக்கும் கோட்டின் நிறமும் வேறுபடுகின்றன. இதன் மூலம், பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களுடன் உரையாடும் இந்த வீடியோ 2025-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதும், இது சுப்ரியா சுலேயின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது அல்ல என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.
