LATEST NEWS
என்ன பெத்த தாயை அவதூறா பேசினாங்க.. அப்போ கூட அமைதியா இருந்தேன் ஆனா… திமுகவினரை கடுமையாக விமர்சித்த முதல்வர் விஜய்..!!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக மீது தங்களால் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். தனது சொந்த தாயை திமுகவினர் தவறாகப் பேசியபோதுகூடப் பொறுத்துக் கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், தனக்கு தாய் அன்பு காட்டும் பெண்களையும் திமுக தலைமையினம் அவதூறாகப் பேசி வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், சிறுமிகளைப் பல வருடங்களாகச் சீரழித்த ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு, தற்போதைய திமுக ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.
அரசியலில் தனக்கு எதிராக வரும் விமர்சனங்கள் குறித்துப் பேசியவர், 34 வருடங்களாக இதையெல்லாம் பார்த்துவிட்டுதான் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், தமக்கு ‘திக் ஸ்கின்’ இருப்பதாகக் கூறினார். சட்டமன்றத்தில் திமுகவினர் தேவையின்றிச் சத்தமிடுவதாகக் குறிப்பிட்ட அவர், தான் பேசக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டதால், தானும் உரக்கப் பேசத் தொடங்கியதாகத் தெரிவித்தார். சினிமா மற்றும் அரசியலில் தான் அடைந்த வெற்றிக்குத் தமிழ்நாட்டு மக்களே காரணம் என்றும் அவர் நன்றியோடு குறிப்பிட்டார்.
திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க நினைத்தால் எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசிகள் அதை எவ்வாறு ஏற்பார்கள் என்று கேள்வி எழுப்பிய விஜய், இதனால் மரகதம் குமரவேல் மனதிற்குள் எவ்வளவு வலி இருந்திருக்குமோ, அதே வலிதான் எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்கும் இருக்கும் என்றார். அதிமுக தொண்டர்களை நோக்கிப் பேசிய அவர், “கவலைப்படாதீர்கள், நான் இருக்கிறேன்; உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று நம்பிக்கையளித்தார்.
இறுதியாக, மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்தது போல, தனக்கும் முதன்மை அரசியல் எதிரி திமுக தான் என்பதைத் தெளிவுபடுத்தினார். திமுகவின் இந்த அணுகுமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், அரசியல் தளத்தில் அவர்களைத் தொடர்ந்து எதிர்த்து நிற்பேன் என்றும் தனது பரப்புரை உரையில் விஜய் உறுதியாகத் தெரிவித்தார்.
