LATEST NEWS
முக்குலத்தோர் வாக்குகளை வளைக்க.. தேவர் குருபூஜைக்கு செல்லும் விஜய்..? முதல்வர் போடும் ரகசியக் கணக்கு… தெற்கில் வெடிக்கும் புதிய போர்க்களம்..!!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு நாளான தேவர் குருபூஜை விழாவில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தென் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன. முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவிற்கு நேரில் செல்லாத முதல்வர் விஜய், அதற்குத் தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலமாக மட்டுமே அஞ்சலி செலுத்தியிருந்தார். இத்தகைய சூழலில், தவெக அரசு தலித்துகளுக்கான அரசாக மாறியிருப்பதாக ஒரு பிம்பம் பொதுவெளியில் பேசப்படும் வேளையில், அவர் தேவர் குருபூஜையில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வாக்கு அரசியலில் மிக முக்கியமான சக்தியாகத் திகழும் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளைத் தவெக பக்கம் ஈர்க்கவே முதல்வர் விஜய் இந்தத் தேவர் குருபூஜை பயணத்தைத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுகவின் அசைக்க முடியாத வாக்கு வங்கியாக இருந்த முக்குலத்தோர் வாக்குகள், தற்போது அதிமுக பலவீனமடைந்து வரும் நிலையில் தவெக-வை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. மேலும், தென் மாவட்டங்களில் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரைச் சுற்றி நிலவும் சமூக பிம்பங்களை உடைத்து, அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற வேண்டிய கட்டாயம் இடைத்தேர்தல் களத்தில் தவெக-வுக்கு உள்ளது.
இருப்பினும், முதல்வர் விஜய்யின் இந்தத் தேவர் குருபூஜை பயணத் திட்டத்திற்குப் பின்னால் சில சவால்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தலித் மற்றும் முக்குலத்தோர் ஆகிய இரு சமூகங்களின் வாக்குகளையும் சமமாகப் பெற நினைக்கும் தவெக-வின் இந்த நகர்வு, தென் மாவட்டங்களின் தற்போதைய சூழலில் தேவையற்ற சமூக சலசலப்புகளையோ அல்லது மோதல்களையோ ஏற்படுத்தக்கூடும் எனச் சில மூத்த அரசியல்வாதிகள் தவெக தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளனர். தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இடைத்தேர்தல்களில் தவெக ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள நிலையில், வரவிருக்கும் இதர இடைத்தேர்தல்களையும் எதிர்கொள்ள அனைத்து சமூக வாக்குகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
