CRIME
என்னடா இதெல்லாம்..?! மாமா வீட்டிலேயே நகையைத் திருடி கார் வாங்கிட்டு… அதே மாமாவையே பூஜைக்குக் கூப்பிட்டு மாட்டிக்கொண்ட வாலிபர்..! கடைசியில் கம்பி எண்ணும் பரிதாபம்..!!
புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில், மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் சத்வே கிராமத்தைச் சேர்ந்த சமர் சவான் (19) என்ற இளைஞர், தனது மாமா உமேஷ் மாருதி சவானின் வீட்டில் இருந்து சுமார் 15 தோலா தங்க நகைகளைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் நகை வியாபாரியான சங்க்ராம் பாபாசோ மோரே என்பவரின் உதவியுடன் அந்த நகைகளை விற்றுப் பெற்ற ரூ.10 லட்சம் பணத்தைக் கொண்டு, சமர் புதிய மஹிந்திரா தார் காரை வாங்கியுள்ளார். கார் வாங்கிய மகிழ்ச்சியில் அதற்குப் பூஜை நடத்த ஏற்பாடு செய்த சமர், அந்தப் பூஜையில் பங்கேற்கும்படி தனது மாமா உமேஷையே அழைத்துள்ளார்.
பூஜைக்குச் செல்வதற்காக நகைகளை அணியத் தேடியபோதே, உமேஷ் மற்றும் அவரது மனைவியின் தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. ஆனால், அதே வீட்டில் இருந்த உமேஷின் பாட்டிக்குச் சொந்தமான நகைகள் அப்படியே இருந்ததால், குடும்பத்திற்கு நெருக்கமானவரே இத்திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், நகைகள் காணாமல் போன காலகட்டத்தில் சமர் திடீரெனப் புதிய விலை உயர்ந்த காரை வாங்கியதைக் கவனத்தில் கொண்டு, அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் நகைகளைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சமர் சவானையும், நகைகளை வாங்கிய நகை வியாபாரி சங்க்ராம் மோரேவையும் போலீசார் கைது செய்ததோடு, நகைகளை விற்ற பணத்தில் வாங்கப்பட்ட மஹிந்திரா தார் காரையும் பறிமுதல் செய்தனர். திருடிய நகைகளின் உரிமையாளரான தனது மாமாவையே காரின் பூஜைக்கு அழைத்த இளைஞரின் இச்செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களுக்கிடையிலான நம்பிக்கையைச் சிதைத்த இந்தச் சம்பவத்தில், இருவரின் பங்கு குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
